Sunday 31 May 2015

கன்னிமாரா நூலகம்

சென்னையில் கன்னிமாரா நூலகம் என்பதை தெரியாத படித்தவர்களே இருக்க முடியாது. எத்தனை ஆண்டுக்கு முந்தைய பழைய பேப்பர் வெளியீடுகள் முதலியவை வேண்டும் என்றாலும் முதலில் தேடப் போவது கன்னிமாரா நூலகத்திற்கு தான். இந்த கன்னிமாரா நூலகத்தின் வரலாற்றை சற்று திரும்பி பார்ப்போமா!!

சென்னை எழும்பூரில் உள்ள சென்னை அருங்காட்சியகம் மற்றும் கலாச்சார கட்டிடத்தின் ஒரு பகுதியில் கேப்டன் ஜெசிமிக்கேல் என்பவரால் 1860-க்கும் முன்பாகவே ஒரு சிறிய நூலகம் தொடங்கப்பட்டது.

அது தான் பின்னாளில் எழும்பூர் பாந்தியன் காம்ப்ளக்ஸ் என அழைக்கப் பட்டது. இந்த பாந்தியன் காம்ப்ளக்ஸ் 1789-க்கு முன்பாகவே அமைக்கப்பட்டாலும் அரசு அதை கிரையம் பெற்றது 1830-ல் தான்.

பிறகு கன்னிமாரா நூலகத்தின் தற்போதைய கட்டிடம் 1890 மார்ச் 22-ல் தான் கட்டப்பட்டது. 

அப்போது இந்தியன் சிவில் சர்வீசஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி கொடுக்க இங்கிலாந்தில் உள்ள ஹெய்லி பூரி கல்லூரி தான் உபயோகப்படுத்தப்பட்டது. அந்த கல்லூரியில்; உள்ள நூலகத்தில் தான் தேவையான புத்தகங்கள் அனைத்தும் இருந்தன.

மேற்கண்ட இங்கிலாந்து நூலகத்தில் புத்தகங்கள் வைக்க இடம் இல்லாத காரணத்தால் கூடுதலாக உள்ள புத்தகங்களை சென்னை ராஜதானிக்கு இங்கிலாந்து அரசு அனுப்பியது.  மெட்ராஸ் அரசு அதை மெட்ராஸ் மியூசியத்திற்கு அனுப்பியது. 1890 வரை மெட்ராஸ் மியூசியத்தின் உள்ளே ஒரு பகுதியாக இருந்த நூலகத்தில் தான் இந்த புத்தகங்கள் பாதுகாக்கப் பட்டன.

1890 மார்ச் 22-ல் அப்போதைய மெட்ராஸ் கவர்னராக இருந்த லார்டு கன்னிமாரா அனைவரும் படிப்பதற்கு ஒரு நூலகம் வேண்டும் என்பதை உணர்ந்து தற்போதைய கன்னிமாரா நூலகத்திற்கு அடிக்கல் நாட்டினார். இது 1896-ல் கட்டி முடிக்கப் பட்டு அப்போதைய கவர்னரான சர் ஆர்தர் எலிபங்க் ஹேவக் என்பவரால் தொடங்கப்பட்டது. நூலகத்திற்கு அடிக்கல் நாட்டிய கன்னிமாரா பெயரே சூட்டப் பட்டது. 



1929-ல் கன்னிமாரா நூலகத்திற்கு முழு நூலகர் நியமிக்கப் பட்டு இயங்க ஆரம்பித்தது. அதன் பிறகு கன்னிமாரா நூலகம் பல்வேறு வளர்ச்சிகளை கண்டுள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மெட்ராஸ் பப்ளிக் லைப்பரரி ஆக்ட் 1948 என ஒரு சட்டம் இயற்றப்பட்டு அந்த சட்டத்தின் கீழ் கன்னிமாரா நூலகம் மத்திய நூலகமாக அறிவிக்கப்பட்டது.

எனவே அவர்கள் நூலக பணிகளை ஒருங்கிணைப்பது, மேம்படுத்துவது போன்ற நூலகம் சம்பந்தபட்ட பணிகளை செய்ய ஆரம்பித்தார்கள்.

1974-ல் கன்னிமாரா நூலகத்திற்கு புதிதாக ஒரு மூன்று மாடி கட்டிடம் கட்டப் பட்டது. அனைத்து நூலக பணிகளும் புதிய கட்டிடத்தில் இயங்கின. ஏராளமான அறிய வகை புத்தகங்களை மிக சரியான முறையில் அனைவரும் தெரிந்து கொள்ள வசதியாக இங்கு பாதுகாத்து வருகிறார்கள். இந்த நூலகத்தில் டெக்ஸ்ட் புக் செக்ஷன், பீரியாடிக்கல் ஹால், ரெபரன்ஸ் ரூம், வீடியோ ரூம் இந்திய மொழிகளுக்கான ஒரு தளம், பார்வையற்றவர்களுக்கான ஒரு நூலகம், இந்திய அமைச்சு பணியாளர்களுக்கான படிப்பு அறை, பிரவுசிங் சென்டர், நிரந்தரமான நூலக கண்காட்சி, நகலெடுக்கும் வசதி போன்ற அனைத்தும் உள்ளன.

இந்தியா முழுவதும் உள்ள பத்திரிக்கைகள் மற்றும் வெளியீடுகள் அனைத்தும் ஏதாவது ஒரு தேசிய சேமிப்பு நூலகம் என இந்திய அரசு அறிவித்துள்ள ஒரு நூலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டியது அவசியம். அவர்களை அதை பாதுகாத்து வருவார்கள். இந்திய அரசு 1981-ல் இந்தியா முழுவதும் இவ்வாறு நான்கு நூலகங்களை தேசிய சேமிப்பு நூலகமாக அறிவித்தது. அதில் இந்த கன்னிமாரா நூலகமும் ஒன்று. 

இதர மூன்று நூலகங்கள் 

1) ஆசியாட்டிக் சொசைட்டி ஆப் பாம்பே – மும்பை
2) நேஷனல் லைப்ரரி – கல்கத்தா
3) டெல்லி பப்ளிக் லைப்ரரி – டெல்லி ஆகும்.

எனவே தென்னிந்தியாவில் உள்ள எந்த வெளியீடு என்றாலும் நாம் கன்னிமாரா நூலகத்தில் பார்த்து எடுத்துக் கொள்ளலாம். 

கன்னிமாரா நூலகத்தின் நூற்றாண்டு விழாவை கொண்டாட 1998-ல் அரசு கன்னிமாரா நூலகத்தின் படத்தை அஞ்சல் தலையாக வெளியிட்டது.




அதே ஆண்டு இதை எலக்ட்ரானிக் மயமாக்க எட்டு லட்சம் ரூபாய் ஒதுக்கி 12 சர்வர்கள் மற்றும் இரண்டு பணியாளர்களை நியமித்து அனைத்து நூலகங்களை டிஜிட்டல் மயமாக்கி பாதுகாக்கும் பணியையும் தொடங்கியது. நூல்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அதனை சேமித்து வைக்க மேலும் இட வசதி தேவைப்பட்டதால் 1999-ல் மேலும் 3 மாடி கட்டிடம் கட்டப்பட்டது. 

கன்னிமாரா நூலகம் தேசிய நூல்கள் ஒப்படைப்பு மையமாக இந்திய அரசால் பப்ளிக் லைப்ரரி ஆக்ட் 1954 படி அறிக்கை செய்யப் பட்டுள்ளதால் அனைத்து புத்தக நூல்கள் மற்றும் பத்திரிக்கை, இதழ்கள் வெளியிட்டாளர்களும் அவர்கள் வெளியீட்டில் ஒரு நகலை கன்னிமாரா நூலகத்திற்கு அனுப்ப வேண்டியது கட்டாயம். எனவே 1954-க்கு பிறகு வெளியான அனைத்து வெளியீடுகளும் கன்னிமாரா நூலகத்தில் கிடைக்கும்.

இது போக இங்கிலாந்தில் உள்ள ஏராளமான வெளியீடுகள் மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி வெளியீடுகள் போன்றவையும் இந்த நூலகத்தில் உள்ளது. மேலும் ஆண்டுதோறும் மாநில அரசு ஒதுக்கும் நிதியை கொண்டும் ஏராளமான புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டு இந்த நூலகத்தில் பாதுகாக்கப் படுகிறது.

தற்போது கல்வி அறிவு வளர்ச்சி மற்றும் வெளியீடுகள் பெருகி வருவதால் கன்னிமாரா நூலகத்திற்கு மேலும் இட நெருக்கடி வரும் என்பது தவிர்க்க முடியாதது தான்.

ஆசியாவில் உள்ள மிகப் பெரிய நூலகங்களில் கன்னிமாரா நூலகமும் ஒன்று. இங்கு ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. ஏராளமான புத்தகங்களுக்கான பட்டியல் இணைய தளத்திலும் உள்ளது. தற்போது 7,70,000 புத்தகங்கள் இருப்பு உள்ளன. இது போக 3500 கால இதழ்கள் (Periodical) மற்றும் 160 பத்திரிக்கைகளும் நூலகத்திற்கு வருகின்றன.

தற்போது நூலகம் முழுவதும் கணிணி மயமாக்கப்பட்டு வாசிப்பவர்கள் இலகுவாக மேற்கண்ட புத்தகங்களை தேடி எடுத்து வாசிக்க வசதி செய்யப் பட்டுள்ளது.

கன்னிமாரா நூலகத்தில் உள்ள புத்தகங்களில் சில அரிய புத்தகங்களை பற்றி பார்ப்போமா!!

1) 1608-ல் அச்சடிக்கப்பட்ட கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் இங்கு பாதுகாக்கப் படுகிறது
2) 1678-ல் இருந்து 1703 வரை வெளியிடப்பட்ட Hourtus Indicus Malabaricus 12 Volumes – author Rheed etc., இங்கு பாதுகாக்கப்படுகிறது
3) 1696-ல் வெளியிடப்பட்ட Ovington(J)   என்பவர் எழுதிய A Voyage to Suratt in the years 1689 என்ற நூல் இங்கு பாதுகாக்கப்படுகிறது.
4) 1711-ல் Lockyer(Charles) என்பவர் எழுதிய An account of the Trade in India புத்தகமும் 1717-ல் அவர் எழுதிய 1)    An account of the religion and Government, leering and economy, etc. of the Malabarians. இங்கு பாதுகாக்கப் படுகிறது
5) 1768-ல் Burmanni(Nicolai) என்பவர் எழுதிய Flora Indica என்ற புத்தகமும் இங்கு பாதுகாக்கப் படுகிறது.

இங்கு பாதுகாக்கப் படும் 1608-ல் அச்சிடப்பட்ட பைபிள் இங்கிலாந்தில் இருக்கும் மிக பழைமையான பைபிள்க்கும் மிக முந்தையது என கூறப்படுகிறது. பைபிள் உலகிலேயே முதன் முதலில் ஜெனிவாவில் தான் 1960 அச்சிடப்பட்டது. அது ஜெனிவா பைபிள் என கூறுவார்கள்.

இவை போக 1881-ல் உள்ள சென்சஸ் ஆப் இந்தியா, 1801-ல் அச்சிடப்பட்ட Plutarch’s Live  மற்றும் 1882-ல் Beschi எழுதிய Grammar of High Dialect of the Tamil Language  என்ற புத்தகமும் இங்கு உள்ளது. இங்கு மிக அபூர்வமான தமிழ் புத்தகங்களோடு லத்தீன் மொழியில் உள்ள புத்தகங்களும் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.

இந்த நூலகத்தின் நிர்வாகம் புத்தகங்களை சீராகவும் ஒழுங்காகவும் நல்ல முறையில் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

அபூர்வ புத்தகங்கள் செல்லரிக்காமல் தடுப்பதற்காக 2006-ல் புத்தகங்களுக்கு மருந்து அடிப்பதற்கு என தனியாக ஒரு அறை ஏற்படுத்தப் பட்டது. அங்கு பாதுகாக்கப் படும் நூல்கள் ஏதாவது ரெபரன்ஸ்க்கு வேண்டும் என்றால் மட்டும் கொடுக்கப்படும். பொது மக்கள் சாதாரணமாக படிக்க முடியாது. அனைத்து அபூர்வ நூல்களும் டிஜிட்டல் மயமாக்கப் பட்டு சிடிக்களிலும் பாதுகாக்கப் படுகிறது.

இந்த நூலகத்தை பற்றி சில வருத்தமான செய்திகளையும் பார்ப்போமா!!

சென்னை மாநில மத்திய நூலகச் சட்டத்தை கொண்டு வர காரணமாக இருந்து கன்னிமாரா நூலகத்திற்கு மத்திய நூலக அந்தஸ்து வழங்கியது மாநிலத்தின் முதல் கல்வி அமைச்சரான திரு.எஸ்.ஆர்.ரங்கநாதன் (எஸ்.ஆர்.ஆர்). அவரது 100-வது பிறந்தநாள் 1991-92-ல் கொண்டாடப் படும் போது இந்திய அரசு அவரை கவுரவப்படுத்தும் விதமாக அஞ்சல் தலை வெளியிட்டது. ஆனால் இன்று வரை  இந்த நூலகத்தின் எந்த பகுதிக்கும் அவர் பெயர் சூட்டுவதற்கு எந்த அரசியல் தலைவர்களும் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

பழமை வாய்ந்த கன்னிமாரா நூலகத்தின் பழைய கட்டிடம் புதுப்பிக்கப் பட்ட பிறகும் கூட பொது மக்கள் அங்கு அனுமதிக்கப் படவில்லை. OB என அழைக்கப்படும் மேற்கண்ட ஓல்ட் பிளாக்கிற்கு நூலக பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுகிறார்கள். இதர நபர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இந்த நூலகத்தில் உறுப்பினராவது ஒரு இமாலய சாதனை ஆகும். ஒன்றுக்கு மேற்பட்ட அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்களின் கையொப்பம் மற்றும் வசிப்பிட சான்று போன்ற ஏராளமான ஆவணங்கள் தேவை. எனவே இவற்றை எளிமை படுத்தி பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம், அறிஞர் அண்ணா நூலகம் ஆகியவற்றில் எளிமையாக உறுப்பினர் சேர்க்கப்படுவது போல் இங்கும் சேர்க்கப்படலாம்.

இவற்றையும் இந்த நூலகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க அப்போது நடவடிக்கை எடுத்த சென்னை மாகாண முதல் கல்வி அமைச்சரான திரு.எஸ்.ஆர்.ரங்கநாதனை கவுரவபடுத்தவும் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்குமா என கல்வியாளர்கள் மட்டும் அல்ல நூலகத்தை பற்றி நன்கு தெரிந்த பொது மக்களும் எதிர்பார்க்கிறார்கள்.

சிலர் புரட்சி தலைவி அம்மா அவர்கள் மீண்டும் அரியணை ஏறி கல்வி அமைச்சர் திரு.ரங்கநாதனின் 125-வது ஆண்டு விழாவை 2016-17-ல் சிறப்பாக கொண்டாடுவார்கள் என கூறுகிறார்கள். 

எப்படியாயினும் ரங்கநாதன் பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டு அவருக்கு ஒரு கவுரவம் கொடுக்கப் பட வேண்டியது நியாயம் தானே!!!

No comments:

Post a Comment