Thursday 22 October 2020

நெடுவாசலாக மாற போகும் குமரி மாவட்டம்

நான் ஆய்வுக்கு தான் அனுமதி கொடுத்தேன். இயற்கை எரிவாயு எடுக்க அனுமதி கொடுக்கவில்லை என பிரச்சனை பெரிதான உடன் மு.க.ஸ்டாலின் நெடுவாசல் பற்றி ஒரு அறிக்கை கொடுத்தார். அதே தவறை தற்போதைய முதல்வர் இயற்கை எழில் கொஞ்சும் குமரி மாவட்டத்தில் செய்கிறார். மத்திய அரசின் ஐ.ஆர்.இ நிறுவனம் குமரி மாவட்டத்தில் தாதுமணல் தொழிலில் உள்ளது. பல உரிமங்கள் பெற்றுள்ளது. எல்லா தனியார் நிலங்களையும் ஆக்கிரமித்து மணல் அள்ளி செல்கிறது. பட்டா நிலங்களை ஆர்ஜிதம் செய்யும் போது ஒரு செண்ட்க்கு 17 ரூபாய் என நிர்ணயித்தது தவறு. அதனை 25 ரூபாய் என நிர்ணயிக்க வேண்டும் என நில உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தார்கள் அதாவது ஏக்கர் ரூபாய் 2500 வேண்டும் என கேட்டார்கள். தக்கலை சார்பு நீதிமன்றம் ஏக்கருக்கு 2100 ரூபாய் நில உரிமையாளருக்கு வழங்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஐஆர்இஎல் வழக்கு நடத்தி நில உரிமையாளர் அந்த சிறிய தொகையை கூட 25 வருடங்களாக பெற விடாமல் தடுத்தது. மீண்டும் 1700 ஏக்கர் கீழ்மிடாலம், மிடாலம், கீழ்குளம், ஏழுதேசம், கொல்லங்கோடு கிராமங்களில் ஆர்ஜிதம் செய்ய அரசை அணுகியது. அப்போதைய மாவட்ட ஆட்சியர் திரு.சுனில்பாலிவால் சர்வே அதிகாரிகளை ஒவ்வொரு புல எண்ணாக ஆய்வு செய்ய சொல்லி ஐஆர்இஎல் கேட்கும் நிலங்கள், தென்னை தோப்பு, விவசாய பூமி, குடியிருப்பு, பள்ளி, தேவாலயங்கள், சாலை, குளங்கள் என அனைத்தும் பொது மக்கள் பயன்பாட்டில் உள்ள நிலங்கள். எனவே அவற்றை ஒதுக்க முடியாது. காலியாக உள்ள 250 ஏக்கர் நிலத்தை மட்டும் ஒதுக்கலாம் என அறிக்கை செய்தார். அந்த அறிக்கையை மறைத்து விட்டு அதே கிராமத்தில் தற்போது 3500 ஏக்கர் நிலங்களை ஆர்ஜிதம் செய்ய அணுகினார்கள். ஏனென்றால் இப்பகுதியில் உள்ள அனைத்தும் கடற்கரை நிலங்கள். கிறிஸ்தவ சமுதாயத்தினர் தான் பெரும்பான்மையினர். எனவே அந்த நிலத்தை அரசு கம்பெனி அபகரிக்க நீண்டநாள் திட்டமாக ஏற்பாடு செய்யப் பட்டது. 250 ஏக்கர் மட்டுமே காலி நிலம் உள்ளது என கலெக்டர் சுனில்பாலிவால் தாக்கல் செய்த அறிக்கையை ஒதுக்கி தள்ளி விட்டு 3500 ஏக்கரை ஐஆர்இஎல்-க்கு ஒதுக்கி வைக்க வேண்டும் என தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது. இனி மத்திய அரசு மாநில அரசு கேட்டபடி தான் நாங்கள் ஒதுக்கி உள்ளோம் என கூறுவார்கள். மாநில அரசு சொல்லும் கட்டிடங்களுக்கு பாதிப்பு இல்லாமல் தான் சுரங்க பணி செய்ய வேண்டும் என நாங்கள் நிபந்தனை விதித்தோம் என கூறுவார்கள். மொத்தத்தில் மேற்கண்ட 5 கிராமங்களில் உள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை வெகுவிரைவில் இழக்க போகிறார்கள். பிறகு மு.க.ஸ்டாலி;ன் சொல்லியது போல் நான் வெறுமனே கடிதம் தான் எழுதினேன் என தற்போதைய முதல்வர் சொல்ல போகிறார். இயற்கை எழில் கொஞ்சும் குமரி மாவட்டம் வெகுவிரைவில் பாலை நிலமாக மாற போகிறது.