Wednesday 11 October 2023

குலசேகரன்பட்டினம் விண்வெளி ஏவுதளத்துக்கான எல்லைகள் அறிவிப்பு…

துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில், ‘இஸ்ரோ’வின் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ள நிலையில், அதற்கான எல்லைகள் தொடர்பான அறிவிப்பை மத்தியஅரசின் உள்துறை வெளியிட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவுக்கு,  ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில், சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் உள்ளது. அங்கு இரு ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன. அங்கிருந்து, நம் நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட சேவைகளுக்கு பயன்படும் செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி., – ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட் உதவியுடன் செலுத்தப்பட்டு, புவி வட்ட பாதையில் நிலைநிறுத்தப்படுகின்றன.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் சிறிய அளவிலான ராக்கெட்டுகளை ஏவுவதற்கான ஏவுதளம் அமைக்க குலசேகரபட்டிணம் பகுதி தேர்வு செய்யப்பட்டது. சதீஸ் தவான் விண்வெளி மையம் அமைந்த ஸ்ரீஹரிக்கோட்டாவை விட குலசேகரன்பட்டினம் நிலநடுக் கோட்டிற்கு அருகில் இருப்பதால் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்தில் பல தரப்பினர் இந்திய நடுவண் அரசை வற்புறுத்தி வருகின்றனர்.தற்போது இஸ்ரோ நிறுவனம் குலசேகரன்பட்டினத்தின் இராக்கெட் ஏவுதளம் அமைக்க முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. குலசேகரன்பட்டினத்தின் கடற்கரையை ஒட்டியப் பகுதியில் விண்வெளியில் ஏவுகணை ஏவும் தளம் அமைக்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது.
இந்த குலசேகரபட்டிணம் எனப்படும் கடற்கரை பகுதியானது  திருச்செந்தூர் – கன்னியாகுமரி செல்லும் சாலையில் , கருப்பட்டிக்கும், வெற்றிலைக்கும் பெயர்பெற்ற  உடன்குடிக்கு கிழக்கே 5 கிமீ தொலைவிலும், திருச்செந்தூருக்கு தெற்கே 18 கிமீ தொலைவிலும், கன்னியாகுமரிக்கு வடகிழக்கே 80 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

இவ்வூரில்தான்  இஸ்ரோவின் இராக்கெட் ஏவுதளம் அமையவுள்ளது. ஏற்கனவே இந்த பகுதியில் புதிய அனல் மின் நிலையம் ஒன்று கட்டப்பட்டுகிறது. 760 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தினில் இது கட்டப்படுகிறது தமிழ் நாடு மின்சார வாரியமும், பாரத மிகு மின் நிறுவனமும் (பெல்) இணைந்து 2×800 மெகாவாட் மிக உய்ய அனல் மின் திட்டம் ஒன்றை, உடன்குடி பவர் கார்ப்பரேசன் லிட் (Udangudi Power Corporation Ltd) என்ற பெயரில் உடன்குடி கிராம எல்லைக்குட்பட்டு, குலசேகரபட்டிணத்தின் நுழைவில் அமைக்கப்படவுள்ளது. இதற்காண பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும்,   கடல் நீரை சுத்திகரிக்கும் நிலையம் ஒன்றும் இங்கு கட்டப்படவுள்ளது. இந்த நீரைக் கொண்டு இயந்திரங்கள் குளிர்விக்கப்படும். மேலும் இந்த மின் நிலையம் நிலக்கரியின் எரி சக்தியால் இயங்கப் படவுள்ளதால், கப்பல்கள் மூலம் நிலக்கரி கொண்டு வரப்பட்டு அனல் மின் நிலையத்திற்கு கன்வேயர் பெல்ட்டுகள் மூலம் கொண்டு வர திட்டம். இதற்காக கடலுக்குள் 7 கி.மீ தொலைவில் ஒரு நிலக்கரி கப்பல்துறை கட்டப்படவுள்ளது.
இந்த நிலையில், குலசையில் ராக்கெட் தளம் அமைப்பதில் மத்தியஅரசு தீவிரம் காட்டி வருகின்றன. காற்றின் வேகம் குறைவு, மழைப்பொழிவு குறைவு, புவி வட்ட பாதைக்கு மிக அருகில் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுவதற்கு சரியான இடம் என தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
இதற்காக, குலசேகரன்பட்டினம் அருகில் உள்ள கூடல்நகர், அமராபுரம், மணப்பாடு, மாதவன்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில், 2,230 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. . தற்போது, அந்த இடங்களை சுற்றி, ‘இந்த இடம் இஸ்ரோவிற்கு சொந்தமானது; அத்துமீறுபவர்கள் தண்டிக்கப்படுவர்’ என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. இரும்பு வேலி அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு, 6 கோடி ரூபாய் செலவில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதற்கு அந்த பகுதி  மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதற்காக நிலம் கையப்படுத்தும் பணியும் தமிழ்நாடு அரசால் நடைபெற்று வருகிறது.

மேலும், ராக்கெட் ஏவுதளம் அமையும் இடத்தின் அருகே, ராக்கெட் உதிரிபாகங்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்காக, தமிழக அரசின் சார்பில் விண்வெளி பூங்கா அமைக்கப்பட உள்ளது. அதற்கு நிலம் கையகப்படுத்தவும் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டிணத்தில் வரவுள்ள  இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்துக்கான எல்லைகள் குறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, குறிப்பிட்ட பகுதிகளில்,  மக்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  குலசேகரபட்டிணம் விண்வெளி மையம் அமைய உள்ளதால், கிழக்கு கடற்கரை சாலையான தூத்துக்குடி-திருச்செந்தூர்-கன்னியாகுமரி சாலையை ஒட்டியுள்ள படுக்கபத்து மற்றும் சாத்தான்குளம் தாலுகாவில் பள்ளக்குறிச்சி, திருச்செந்தூர் தாலுகாவில் மாதவன்குறிச்சியை உள்ளடக்கிய பகுதி தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
இந்த மையத்தின் வடக்கு எல்லையாக தாண்டவன்காடு, நாராயணபுரம் மற்றும் மாதவன்குறிச்சி கிராமங்களும், தெற்கே மன்னார் வளைகுடா, கிழக்கே மன்னார் வளைகுடா மற்றும் அமரபுரம், மணப்பாடு கிராமங்களும், மேற்கே படுக்கபத்து மற்றும் எள்ளுவிளை கிராமங்களும் அடங்கியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த பகுதிகளில் மக்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.