Wednesday 23 August 2023

*தலைமைச் செயலகம்*

 *தலைமைச் செயலகம்*

===========
*சென்னை தினத்தின் துவக்கப் புள்ளி*
இன்று சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. தற்போது இந்தியாவின் மிகப் பெரிய நகரங்களில் ஒன்றான சென்னை நகரத்தின் துவக்கப் புள்ளியாக அமைந்தது புனித ஜார்ஜ் கோட்டை .

இந்தியாவின் பண்டைய கால நகரங்கள் பல வீழ்ந்திருக்கின்றன. குக்கிராமங்கள் விரிவடைந்து பல பெரிய நகரங்கள் உருவாகியிருக்கின்றன. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது ஒரு நகரத்தின் துவக்கப் புள்ளியை அறிவது அவ்வளவு சுலபமான காரியமில்லை. ஆனால், சென்னை நகருக்கு ஒரு துல்லியமான துவக்கப் புள்ளியிருக்கிறது.

பதினேழாம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்கள் அவை. இந்தியாவின் சக்கரவர்த்தியாக அக்பரின் மகனான ஜஹாங்கீர் ஆட்சியில் இருந்தார். இந்தியாவில் ஏற்கனவே போர்ச்சுகீசியர்களும் டச்சுக்காரர்களும் கால் பதித்திருந்த நிலையில், மிகத் தாமதமாக இந்தியாவை நோக்கிப் பார்வையைத் திருப்பியது இங்கிலாந்து.

1608ல் இந்தியா வந்த கிழக்கிந்தியக் கம்பனியின் கப்பல்கள் சூரத்தை வந்தடைந்தன. 1615ல் ஆங்கிலத் தூதரான சர் தாமஸ் ரோ, சக்கரவர்த்தி ஜஹாங்கீரின் தர்பாருக்குச் சென்று, இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பனி வர்த்தகம் செய்துகொள்வதற்கான அனுமதியைப் பெற்றார். பிறகு, வணிகத்திற்காக சூரத்தில் ஒரு கிடங்கைக் கட்டிக்கொண்டனர்.

அதற்கு முன்பாகவே மசூலிப்பட்டனத்தில் டச்சுக்காரர்கள் ஒரு கிடங்கைக் கட்டி, வர்த்தகம் செய்துவந்தனர். அவர்களுடைய கோட்டை பழவேற்காட்டில் அமைந்திருந்தது. அவர்களது வர்த்தகம் சிறப்பாக நடந்துவந்த நிலையில், கிழக்குக் கடற்கரைப் பகுதியின் முக்கியத்துவத்தை கிழக்கிந்தியக் கம்பனி உணர்ந்தது. அவர்கள் சூரத்திலிருந்து ஆண்ட்ரூ கோகன் தலைமையில் ஒரு குழுவை கிழக்குக் கடற்கரைப் பகுதிக்கு அனுப்பிவைத்தனர்.

இதற்கிடையில் வேறொரு விஷயம் மசூலிப்பட்டனத்தில் நடந்துகொண்டிருந்தது. அங்கிருந்த தாமஸ் ஐவி என்ற அதிகாரி, ஆர்மகான் என்ற ஊரில் ஆங்கிலேயர்களின் வணிகத்தைக் கவனித்து வந்த ஃபிரான்சிஸ் டே என்பவரை அணுகி, கிழக்கிந்தியக் கம்பனிக்கு கரையோரமாக ஒரு இடத்தைக் கண்டுபிடிக்கும்படி சொன்னார். இதையடுத்து, ஃப்ரான்சிஸ் டே கப்பலில் பழவேற்காட்டிலிருந்து பாண்டிச்சேரிவரை கரையோரமாகவே பயணம் செய்தார்.

அப்போதுதான் சாந்தோமுக்கு வடக்கில் மூன்று மைல் தூரத்தில் கூவம் ஆறு கடலில் கலக்கும் இடத்திற்கு அருகில் இருந்த மதராசப் பட்டனம் கண்ணில்பட்டது. அந்தப் பகுதி அப்போது தாமரல வெங்கடாத்ரி என்பவர் வசம் இருந்தது. இவருடைய தந்தையார்தான் சென்னப்பநாயக்கர். ஃப்ரான்சிஸ் டேவை வரவேற்ற வெங்கடாத்ரி, வணிகத்திற்கு ஒத்துழைக்க முன்வந்தார்.

இதையடுத்து, 1639ல் ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி தாமரல வெங்கடாத்ரியும் ஃப்ரான்சிஸ் டேவும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதன்படி, கூவம் நதிக்கும் எழும்பூர் நதிக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியில் ஒரு கோட்டையைக் கட்டி, வணிகம் செய்ய அந்த ஒப்பந்தம் அனுமதி அளித்தது.

இரண்டாண்டுகளுக்கு அங்கிருந்து வியாபாரம் செய்துகொள்ளலாம் என்றும் வரும் வருவாயில் பாதியை நாயக்கருக்கு அளிக்க வேண்டுமென்றும் ஒப்பந்தம் கூறியது. இந்த ஒப்பந்தம் முதலில் தெலுங்கில் எழுதப்பட்டு, பிறகு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.

இப்படித்தான் சென்னையின் கதை துவங்கியது.

இதற்குப் பிறகு, சூரத்திற்குச் சென்று மதராசப்பட்டனத்தில் ஒரு வணிக தலத்தை அமைக்க அனுமதி பெற்றுக்கொண்டு, ஃப்ரான்சிஸ் டேயும் ஆண்ட்ரூ கோகனும் 1640ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி இங்கே வந்தடைந்தனர். அதனால், சிலர் அதனை சென்னையின் பிறந்த நாளாகக் கூறுவதுண்டு. இருந்தபோதும், பிற்காலத்தில் ஆகஸ்ட் 22ஆம் தேதியே அதன் பிறந்த தினமாக நிலைத்துவிட்டது.

இதற்குப் பிறகு கோட்டையைக் கட்டும் பணிகள் துவங்கின. கட்டுமானப் பணிகளுக்கும் பராமரிப்பிற்கும் பெரிய அளவில் பணம் கடன் வாங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்ட ஃபிரான்சிஸ் டே, முதலில் சூரத்திற்கு அழைக்கப்பட்டார். பிறகு அங்கிருந்து அவர் இங்கிலாந்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டார். இதனால், கோட்டையின் கட்டுப்பாடு ஆண்ட்ரூ கோகன் வசம் வந்தது.

இருந்தபோதும் பழவேற்காட்டில் டச்சுக்காரர்களும் சாந்தோமில் போர்ச்சுக்கீசியர்களும் இருந்ததால், மதராசப்பட்டனத்தில் வணிகத்தைப் பெருக்குவதில் முதலில் கம்பனி ஆர்வம் காட்டவில்லை. இருந்தபோதும் ஆண்ட்ரூ கோகனும் வேறு இரண்டு ஆங்கிலேயர்களும் அங்கு தொடர்ந்து வணிகத்தை நடத்திவந்தனர்.

ஒரு கட்டத்தில் ஆண்ட்ரூ கோகன் இங்கிலாந்துக்கு வரவழைக்கப்பட்டு, மதராசப்பட்டனத்தில் கோட்டை கட்டியதற்காக விசாரிக்கப்பட்டார். பிறகு, அவரது வாதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதற்கிடையில், 1644ல் தாமஸ் ஐவி என்பவர் கோட்டைக்குப் பொறுப்பேற்றார். அந்த காலகட்டத்தில் கர்நாடக அரசில் பல குழப்பங்கள் இருந்தன. இந்த நிலையில், அப்போதைய ராஜாவான ரங்கராயுலுவுக்கு ஆங்கிலக் கம்பனி பல உதவிகளைச் செய்தது. இதையடுத்து மேலும் பல சலுகைகள் ஆங்கிலேயர்களுக்கு வழங்கப்பட்டன. குறிப்பாக நீதி வழங்கும் அதிகாரம் ஆங்கிலேயர்களுக்கு வழங்கப்பட்டது. 1648ல் தாமஸ் ஐவி கோட்டையின் அதிகாரத்தை, ஹென்றி ஹில் என்பவருக்கு மாற்றிக்கொடுத்துவிட்டு இங்கிலாந்து திரும்பினார்.

இந்த இடத்தின் பெயர் குறித்து தொடர்ந்து பல விவாதங்கள் நடந்துவருகின்றன. "நாம் தெரிந்துகொள்வது, சென்னைப்பட்டனம் இருந்த இடத்தில்தான் தற்போது கோட்டை நிற்கிறது என்பதும் மதராசப்பட்டனம் என்ற கிராமம், சென்னைப்பட்டனத்திற்கு அருகே தொடர்ந்து இருந்தது என்பதும்தான்" என தன்னுடைய மதராசப்பட்டனம் நூலில் குறிப்பிடுகிறார் நரசய்யா.

அதேபோல, புனித ஜார்ஜ் கோட்டை தற்போதுள்ளதைப் போல கற்களால் கட்டப்பட்டிருக்கவில்லை. மரத் தடிகளை ஊன்றி, கோட்டை போன்ற பகுதி உருவாக்கப்பட்டது. பிறகு செங்கல், கற்களைக் கொண்டு கோட்டையாக மாற்றப்பட்டது. முழுமையாகக் கட்டி முடிக்க 13 ஆண்டுகள் ஆயின.

1662 செப்டம்பரில் எட்வர்ட் விண்டர் என்பவர் கோட்டைக்குப் பொறுப்பேற்றார். இவரது காலகட்டத்தில் கோட்டைக்குள் ஒரு சிறிய கிறிஸ்தவ தேவாலயம், நூலகம், மருத்துவமனை ஆகியவை கட்டப்பட்டன. அந்தத் தேவாலயம் செயின்ட் மேரி சர்ச் என அழைக்கப்பட்டது. அது ஒரு நீதிமன்றமாகவும் செயல்பட்டது.

1672ல் யெலிஹு யேல் என்ற இளைஞர் மெட்ராஸை வந்தடைந்தார். அமெரிக்காவின் மாஸச்சூஸட்சில் பிறந்திருந்தாலும், தந்தையோடு இங்கிலாந்து திரும்பினார். 23 வயதில் கிழக்கிந்தியக் கம்பனியில் வேலைக்குச் சேர்ந்து மெட்ராசிற்கு வந்தார் அவர். யேல் வந்து சேர்ந்த சில ஆண்டுகளில் கோட்டையின் ஆளுநராக ஸ்ட்ரேன்ஸம் மாஸ்டர் என்பவர் பொறுப்பேற்றார்.
அவர் தேவாலயத்தை பெரிதாகக் கட்ட விரும்பினார். கோட்டைக்குள் வசித்தவர்களிடமிருந்து பணம் வசூலிக்கப்பட்டது. மொத்தம் 850 பகோடாக்கள் திரட்டப்பட்டன. யேலும் பங்களிப்புச் செய்தார். 1678 மார்ச் 25ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டன.1678 அக்டோபர் 28ஆம் தேதி அந்தக் கட்டடம் தேவாலயமாக உருவெடுத்தது.

புனித ஜார்ஜ் கோட்டைக்குள் இருக்கும் கட்டடங்களிலேயே மிக முக்கியமான கட்டடம் தற்போது தலைமைச் செயலகமும் தமிழக சட்டப்பேரவையும் அமைந்திருக்கும் பிரதான கட்டடம்தான். தற்போதைய தமிழ்நாடு அரசின் முதலமைச்சரின் அலுவலகம், மாநில அமைச்சரவைக் கூட்ட அரங்கம் ஆகியவையும் இந்த கட்டடத்தில்தான் இருக்கின்றன.

தற்போதுள்ள கட்டடம் 1910வாக்கில் கட்டிமுடிக்கப்பட்டது. ஆனால், கோட்டை கட்டப்பட்டதிலிருந்தே மிக முக்கியமான கட்டடங்கள் இருந்திருக்கின்றன. ஆண்ட்ரூ கோகன் காலத்திலேயே சிவில் நிர்வாகிகள் அமரும் வகையில் ஒரு கட்டடம் அங்கே இருந்தது. பிறகு வேறு வேறு கட்டடங்கள் கட்டப்பட்டன. 1693ல் புதிய ஆளுநராக வந்த நதேனியல் ஹிக்கின்சன், முழுமையான ஒரு பிரதான கட்டடத்தைக் கட்ட விரும்பினார். இதையடுத்து, அந்த இடத்தில் இருந்த எல்லா பழைய கட்டடங்களும் 1694ல் இடிக்கப்பட்டன. அடுத்த ஆண்டிலேயே புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.

1752ல் வீசிய பெரும் புயலில் இந்தக் கட்டடம் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. இதற்குப் பிறகு பெரிய அளவில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கட்டடம் வலுப்படுத்தப்பட்டது. மேலும் சில இணைப்புக் கட்டடங்கள் கட்டப்பட்டன 1825வாக்கில் இது அரசு அலுவலகம் என்று அழைக்கப்படும் அளவுக்கு மாகாணத்தின் முக்கிய நிர்வாகக் கட்டடமாக உருவெடுத்தது.

1910ல் புதிதாக மேலும் சில கட்டுமானங்கள் செய்யப்பட்டன. கவுன்சில் கூட்டம் நடப்பதற்கான அரங்கு கட்டப்பட்டது. நிர்வாக அலுவலகம் முதல் மாடிக்கு மாற்றப்பட்டது. தற்போது தலைமைச் செயலகத்தின் அடையாளமாக உள்ள கறுப்பு நிற சார்னோகைட் பாறைகளால் ஆன தூண்கள் நிறுவப்பட்டன. இந்தக் கட்டடத்தின் பின் பகுதியில் 1958ல் புதிதாக ஒரு கட்டடம் கட்டப்பட்டது. 1694ல் கட்டப்பட்ட பகுதிகளோடு, இன்னமும் நிமிர்ந்து நிற்கிறது இந்தக் கட்டடம்.

புனித ஜார்ஜ் கோட்டையின் மற்றொரு கம்பீரமான அம்சம், அதன் கொடிமரம். கோட்டை கொத்தளத்தின் மீது அமைந்திருக்கும் இந்தக் கொடி மரம், 148 அடி உயரமுடையது. இந்தியாவிலேயே மிக உயரமான கொடி மரங்களில் இதுவும் ஒன்றும். 1688ஆம் ஆண்டில் தேக்கு மரத்தால் செய்யப்பட்டு நிறுவப்பட்ட இந்தக் கொடி மரம், 90களில் இரும்பாலானதாக மாற்றப்பட்டது.

இங்கிலாந்தின் அரசர் இரண்டாம் ஜேம்ஸிடம் அனுமதி பெற்று, யூனியன் ஜாக் கொடியைப் பறக்கவிட இந்தக் கொடிமரம் செய்யப்பட்டது. 1688 ஜூன் மாதம் யூனியன் ஜாக் முதன் முறையாக இந்தக் கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. முதலில் வெவ்வேறு இடங்களில் நிறுவப்பட்டிருந்த இந்தக் கொடிமரம், 1800களின் துவக்கத்தில் கோட்டையின் கொத்தளத்திற்கு மாற்றப்பட்டது.
18ஆம் நூற்றாண்டின் மத்தியில் கோட்டையை ஃபிரஞ்சுக்காரர்கள் கைப்பற்றியபோது, இதில் ஃப்ரான்ஸ் தேசத்தின் கொடி பறக்கவிடப்பட்டது. 1932ல் சுதந்திரப் போராட்ட வீரரான ஆர்யா, இந்தக் கொடி மரத்தின் மீது ஏறி, அதிலிருந்த யூனியன் ஜாக்கை அகற்றிவிட்டு இந்திய தேசியக் கொடியைப் பறக்கவிட்டார். இதற்காக இவருக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது,

1947 ஆகஸ்ட் 15ஆம் தேதி அதிகாலை இந்திய தேசியக் கொடி இந்தக் கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. அந்தக் கொடி தற்போது கோட்டைக்குள்ளேயே உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

இவை தவிர, அந்தக் கோட்டைக்குள் பல சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்கள் இருக்கின்றன. கொல்கத்தா, தில்லி என கிழக்கிந்தியக் கம்பனியின் அதிகார மையம் வேறெங்கோ சென்ற பிறகும் இதன் முக்கியத்துவம் குறையவில்லை. இந்தக் கோட்டையை மையமாக வைத்தே சென்னை வேகமாக விரிவடைய ஆரம்பித்தது.
கிட்டத்தட்ட நான்காவது நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது இந்தக் கோட்டை. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இந்திய ராணுவத்தின் அலுவலகங்கள், தமிழ்நாடு அரசின் அலுவலகங்கள், தலைமைச் செயலகம், இந்தியத் தொல்லியல் துறையின் அலுவலகம், அருங்காட்சியகம் என இப்போதும் இதன் முக்கியத்துவம் குறையவில்லை.











Thursday 17 August 2023

பனை தொழில் விழிப்புணர்வில் தமிழ்நாடு நாடார் சங்கத்தின் பங்கு!

 தமிழ்நாடு நாடார் சங்கம் முயற்சியில் நீயூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் பனையும் தமிழனும் எனும் நிகழ்ச்சி தொடர்ந்து மூன்று முறையும் பலமுறை பனை சார்ந்த நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்து https://youtu.be/Pn7Jkie6t1o உலக தமிழர்களிடம் கொண்டு சேர்த்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றது.


பனையும் தமிழனும் என்கின்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி 12/02/2020 ஆம் தேதியன்று கள் இறக்குவதால் ஏற்படும் சமூக நலன்கள் என்னென்ன?எனும் தலைப்பிலும்  https://youtu.be/5Lmg8nyWEYI


24/02/2020 ஆம் தேதியன்று பொருளாதாரத்தில் பனை மரத்தின் பங்கு என்ன?எனும் தலைப்பிலும்

 https://youtu.be/p1F7YVLRekM

 02/03/2020 பனைமரத்தின் அழிவையும் பனைத் தொழிலாளர்களின் அவலத்தையும் விவரிக்கும் சிறப்பு தொகுப்பு https://youtu.be/YDNsg_2KgH0

தொடர்ந்து ஒளிபரப்பானது.


இந்நிகழ்ச்சியில் பனை ஆர்வலர்கள்

நல்லுசாமி கவுண்டர் ஜெ.முத்துரமேசுநாடார்

வி.எல்.சி.இரவி

சேதுபாலசிங்கம்

புழல் தர்மராஜ் 

செல்வராமலிங்கம்

கவிதா காந்தி

கமாலிக்கா காமராஜர்

ஆல்பின் மனோ

சாலி பாண்டியன்

உள்ளிட்டவர்கள் தமிழ்நாடு அரசு கவனத்திற்கு கொண்டு சென்றனர் 


பனையை காப்போம்!

பனை தொழில்களை காப்போம்!!

பனை தொழிலாளர்களை காப்போம்!!!