Thursday 30 July 2020

EIA 2020 - கவுரவ கொள்ளையை தடுத்து நிறுத்திய மத்திய அரசுக்கு பாராட்டுக்கள்

கொள்ளையில் பல வகை உண்டு. சிலர் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளை அடிப்பர். சிலர் பயமுறுத்தி கொள்ளை அடிப்பர். சிலர் புத்தியை பயன்படுத்தி கொள்ளை அடிப்பர். சில படித்த புத்தி உள்ள கொள்ளையர்கள் சுற்றுச்சூழல் என்ற பெயரில் கொள்ளை அடிப்பர். இந்த கொள்ளையை முழுவதும் தற்போது மத்திய அரசு EIA 2020 என அறிவிக்கை செய்ததன் மூலம் தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளது. இதற்கு பாராட்டுக்கள். இதனால் உலகம் அழிந்து விடும் என கூக்குரல் இடுகிறார்கள். அழிவு எப்போது தொடங்கியது. திமுக ஆட்சிக்கு வந்த உடன் தொடங்கியது. அதற்கு முன்பு பஞ்சாயத்துக்கள், பொது சுகாதாரம், குடிநீர் பராமரிப்பு மற்றும் சாலை பராமரிப்பு மூன்றையும் மட்டும் செவ்வனே செய்து வந்தார்கள். கொள்ளை அடிப்பதற்காக பஞ்சாயத்துக்கள் கட்டிடம் கட்டலாம் என திமுக ஆட்சியில் ஒரு உத்தரவிட்டார்கள். அதன் பிறகு பொது சுகாதார பராமரிப்பும், குடிநீர் பராமரிப்பும் இல்லாமலேயே போய் விட்டது. அப்போது செய்த சிறிய தவறில் வருமானம் வருவதை கண்டு பிறகு உள்ள ஆட்சியாளர்களும் அதில் கைவைக்க தயாராக இல்லை. அறிவில்லாதவர்கள் ஆட்சியில் இருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு ஒரு உதாரணம் இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் என்பது. ஏற்கனவே நீர் மாசு தடுப்பு சட்டம் மற்றும் காற்று மாசு தடுப்பு சட்டம் என இரண்டு சட்டங்கள் உள்ளன. இவற்றை சரியாக நடைமுறை படுத்தினாலே சுற்றுச்சூழல் முழுவதும் பாதுகாக்கப் படும். இந்திராகாந்தி பிரதமராக இருக்கும் போது கோவாவில் முகாமிட்டு இருக்கும் போது காலையில் கடற்கரையில் நடை பயிற்சி செய்யும் போது அங்கு ஏராளமான நபர்கள் கடற்கரையில் மலம் கழித்துள்ளதை கண்டு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் வருத்தப் பட்டு உள்ளார். அதன் அடிப்படையில் தான் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் இயற்றப் பட்டது.

இந்த சட்டத்தின் கீழ் நீங்கள் நினைத்தது போல் உங்கள் இடமாக இருந்தால் கூட தொழில் செய்ய முடியாது.

நீங்கள் தொழில் செய்ய வேண்டும் என்றால் "எ" என்பவர் தொழிற்சாலை அமைக்க உத்தேசித்துள்ளார். இது பற்றி கருத்து கேட்பு இந்த தேதியில் நடக்கும். அனைவரும் கருத்து சொல்லலாம் என பத்திரிக்கையில் விளம்பரம் செய்ய வேண்டும். உடனடியாக  கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர், ஜாதி தலைவர், கட்சி தலைவர், வட்ட கிளை, மாவட்டம் என பலநூறு நபர்கள் தனிதனியாக வருவார்கள். அவர்கள் கேட்கும் தொகையை கொடுக்க வில்லை என்றால் நான் இதனால் பாதிப்பு என கருத்து கேட்பில் சொல்லுவேன். எழுதியும் கொடுப்பேன் என கவுரவமான மிரட்டல் விடுப்பார்கள். இதில் சமூக ஆர்வலர் என்று மனிதரில் விவசாயம் செய்பவர்களும் அடக்கம். இவர்களுக்கு மூலதனம் கொஞ்சம் பிசறாமல் ஆங்கிலம் பேசுவது மட்டும் தான். இம்மாதிரி மிரட்டல்களுக்கு பயந்தே யாரும் தொழில் செய்ய முடியாத நிலையும் இருந்தது. அந்நிய நிறுவனங்களும் இங்கு தொழில் தொடங்க அச்சப்படும் நிலை வந்தது.

இதனை கண்கூடாக அறிந்து இனிமேல் இவ்வாறு கருத்து கேட்பு தேவையில்லை என கூறுகிறார்கள். ஆனால் அதே நேரத்தில் இதனால் என்னென்ன சாதக பாதகங்கள் என்பதை சம்பந்தப் பட்ட நிறுவனங்களே அறிக்கையாக தயாரித்து அரசிடம் கொடுக்க வேண்டும். அதில் தவறான தகவல் கொடுக்கப் பட்டு இருந்தாலோ அல்லது தவறாக இருந்தாலோ அரசு நடவடிக்கை எடுக்க முடியும். மேலும் கழிவு நீர் மற்றும் புகை ஆகியவற்றிற்கு ஏற்கனவே இந்திய அரசு தர நிர்ணயம் செய்துள்ளது. அதை மீறினால் நேரடியாக மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரியும் வகையில் ஆன்லைனில் இணைப்பு கொடுத்து வைத்திருக்க வேண்டும். எனவே தவறாகவோ அல்லது கூடுதலாகவோ வந்தால் உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துக் கொள்ள முடியும். எவ்வளவு வருகிறது என்பதை பொது மக்களும் தெரிந்து கொள்வதற்கும் வசதி செய்யப் பட்டு உள்ளது. ஆனால் கவுரவமாக மிரட்டி மனிதரில் விவசாயம் செய்து தொழில் முனைவோரிடம் பணம் பறிக்கும் கொள்ளை கூட்டத்திற்கு இது ஒரு முற்றுப்புள்ளியாகி விட்டது. அவர்கள் இனி என்ன செய்ய முடியும். மத்திய அரசு இவர்களுக்கு இம்மாதிரி பணம் அள்ளி கொடுக்க முடியுமா? முடியாது அல்லவா?

எனவே கவுரவ கொள்ளை நடத்தும் சமூக விரோதிகளின் வாழ்வாதாரத்தை அழித்த மத்திய அரசு ஒழிக என அவர்கள் கூறுவது நியாயம் தானே!!!