Sunday 3 November 2019

இன்றைய நீதி பற்றி அருமையான கதை

ஒரு செல்வந்தன் வீட்டுக்கு திருடன் ஒருவன் திருட சென்றான். அன்று இரவு மழை. திருடன் சுவரை தாண்டும் பொது சுவர் இடிந்து அவன் மேல் விழுந்து அவன் இறந்துவிட்டான். திருடனின் மனைவி அரசனிடம் புகார் கொடுத்தாள், வீட்டுக்காரன் சுவரை சரியாக கட்டவில்லை அதனால் தான் என் கணவன் இறந்தார் என்று.


வழக்கை விசாரித்த அரசன் நான் நீதி தவறாதவன் தவறு அந்த வீட்டுக்காரன் மேல் தான் அவனை உடனே பிடித்துவாருங்கள் என் ஆணையிட்டான். வீட்டுக்காரனிடம் விசாரணை நடந்தது அவன் கூறினான் தவறு என்னுடையதல்ல சுவரை கட்டிய கொத்தனாருடைய தவறு என. உடனே அரசன் கொத்தனார் தான் குற்றவாளி உடனே ,,,,,,,

அவனை பிடித்துவாருங்கள் என கட்டளையிட்டான்.

கொத்தனாரிடம் விசாரணை நடந்தபோது அவன் கூறினான் தவறு என்னுடையது அல்ல. நான் 10 குவளை தண்ணீர் தான் ஊற்ற சொன்னேன் சித்தாள் அதிகம் ஊற்றிவிட்டன். தவறாக கலவை உண்டாக்கிய சிற்றாள் தான் தவறு செய்துவிட்டான் என கூறினான். உடனே அவனை பிடித்துவாருங்கள் என கட்டளையிட்டான்.

சித்தாளிடம் விசாரணை நடந்தபோது அவன் கூறினான் தவறு என்னுடையது அல்ல. நான் 10 குவளை தண்ணீர் தான் ஊற்றினேன் ஆனால் குவளை அளவில் பெரியதாக இருந்தது. இந்த குவளையை செய்த குயவனின் தவறு தான் இது என கூறினான். உடனே அரசன் ,,,

குயவன் தான் குற்றவாளி உடனே அவனை பிடித்துவாருங்கள் என கட்டளையிட்டான்.

குயவனிடம் விசாரணை நடந்தபோது அவன் கூறினான் தவறு என்னுடையது அல்ல. நான் குவளை செய்யும் பொது எங்கள் ஊர் நாட்டியக்காரி இங்கும் அங்குமாக நடந்து சென்று என் கவனத்தை சிதைத்துவிட்டாள். இது அவள் தவறு என கூறினான்.

உடனே அரசன் நாட்டியக்காரி தான் குற்றவாளி உடனே அவளை பிடித்துவாருங்கள் என கட்டளையிட்டான்.

நாட்டியக்காரியிடம் விசாரணை நடந்தபோது அவள் கூறினாள் தவறு என்னுடையது அல்ல. நான் நாடகத்துக்கு உடுத்த வண்ணானிடம் கொடுத்த துணியை அவர் துவைத்து கொடுக்கவில்லை. ,,,

அதை கேட்கத்தான் நான் அங்கும் இங்கும் நடந்தேன், ஆதலால் தவறு வண்ணானுடையது என கூறினாள். உடனே அரசன் வண்ணான் தான் குற்றவாளி உடனே அவனை பிடித்துவாருங்கள் என கட்டளையிட்டான்.

வண்ணானிடம் விசாரணை நடந்தபோது அவன் கூறினான் தவறு என்னுடையது அல்ல. ,,,,

நான் துணி துவைக்கும் கல் மேல் முனிவர் ஒருவர் அனர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தார். என்னால் அவர் தியானத்தை கலைக்கமுடியவில்லை , துணியும் துவைக்கமுடியவில்லை. எனவே தவறு அந்த முனிவருடயது என்றான். உடனே அரசன் முனிவர் தான் குற்றவாளி உடனே அவனை பிடித்துவாருங்கள் என கட்டளையிட்டான்.

முனிவரிடம் விசாரணை நடந்தபோது முனிவர் எதையும் பேசவில்லை. அவர் மௌன முனி மௌனமாக இருந்தார். இதை கண்ட அரசன் மௌனம் சம்மதத்தின் அடையாளம் ஆகவே இவர் தான் குற்றவாளி இவரை தூக்கிலிடுங்கள் என தீர்ப்பு வழங்கினான்.,,

இப்படித்தான் இன்றைய நீதியும் உள்ளது. தவறு செய்பவனை விட்டுவிட்டு மாற்றி மாற்றி கை காட்டி தப்பித்துக்கொள்கின்றனர்.

அரசும் நாங்கள் நீதி தவற மாட்டோம் ஆதாரங்களும் ஆவணங்களும் தான் நீதிக்கு தேவை என தீர்ப்புகள் வழங்கி அழியா பாவம் செய்து கொண்டிருக்கிறது.

படித்ததில் பிடித்தது