Friday 4 May 2018

நியூஸ் 7 தமிழின் ஒரு உன்னத பணி.


நீட் தேர்வு எழுத  தமிழக மாணவர்களுக்கு வேறு மாநிலங்களில் இடம் ஒதுக்கிய விபரம் அரசுக்கு ஒரு வாரத்திற்கு முன்பாகவே தெரியும். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு அல்லது மாணவர்களையும் பெற்றோர்களையும் பாதுகாப்பாக தேர்வு மையத்திற்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டிய அரசு வாளாயிருந்தது. நேற்று மீடியாக்களில் இது பற்றிய செய்தி வந்த உடன் அவசர அவசரமாக 1000 ரூபாயும் இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணமும் தருவோம் என கூறியது. அதுவும் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் போய் கேட்டால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே அந்த தொகை என கூறி விட்டார்கள். நேற்று மதியம் அரசு அறிவித்த தொகையை நேற்றோ இன்றோ பெற்றுக் கொண்டு அடுத்த மாநிலத்திற்கு பயணம் செய்து நாளை பரீட்சை எழுத முடியுமா? முடியாது. அதே போல்  வவுச்சரை கொடுத்து பணம் பெறுவதும் முடியாத காரியம். ஏனென்றால் ரயில் டிக்கெட்டை ரயில் நிலையங்களில் பெற்றுக் கொள்வார்கள். எனவே முன்பதிவு செய்த டிக்கெட் அல்லாமல் மற்றவற்றிற்கு பணம் பெற முடியாது. எனவே இதில் அரசு சரியாக செயல்படவில்லை. அண்டை மாநில முதல்வர் கூட நம் மாநிலத்தோடு முல்லை பெரியாறு பிரச்சனையில் கருத்து வேறுபாடு இருந்தாலும் தமிழக மாணவர்களுக்கு உதவி செய்ய பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பூத் அமைத்து உதவி செய்ய ஏற்பாடு செய்தார். ஏன் தமிழக அரசும் அவ்வாறு அதிகாரிகளை அனுப்பி இருக்க கூடாது? ஆனால் நீட் தேர்வு எழுத தமிழகத்தில் இருந்து செல்லும் மாணவர்களுக்கு உதவி செய்ய தமிழகத்தை சேர்ந்த நியூஸ் 7 தொலைக்காட்சி அவர்கள் நடத்தும் அன்புபாலம் என்ற அமைப்பின் மூலம் தன்னார்வலர்களை சேர்த்துக் கொண்டு நேற்று உடனடியாக செயலில் இறங்கி உள்ளது. மதுரையை சேர்ந்த சில தொழில் அதிபர்கள் வாகன ஏற்பாடும் தங்கும் அறை வாடகையையும் நேரடியாகவே சம்பந்தப்பட்ட ஹோட்டல்களில் செலுத்தி உள்ளார்கள். அன்புபாலம் நேரடியாக எந்த பணத்தையும் பெறாமல் பணத்தை நேரடியாகவே ஹோட்டல்களுக்கே செலுத்த வைத்து விட்டு இவர்களது தன்னார்வல உறுப்பினர்களை வைத்து திருவனந்தபுரம், எர்ணாகுளம் பகுதிகளில் இதே போல் பூத் அமைத்து தமிழ்நாட்டில் இருந்து வரும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் தங்குவதற்கு இலவச தங்கும் இடம், உணவு வசதி மற்றும் போக்குவரத்து வசதியை செய்து வருகிறார்கள். ஏராளமான தமிழகத்தை சேர்ந்த தன்னார்வலர்களும் இந்த பணியில் தங்களை ஈடுபடுத்தி மேற்கண்ட இடங்களில் நியூஸ் 7 அன்புபாலத்தோடு கைகோர்த்து செயல்படுகிறார்கள் என அங்குள்ள சில நண்பர்கள் கூறினார்கள். இந்த பணி பாராட்டப்பட வேண்டியதே.. அங்குள்ள எனது நண்பர் ஒருவர் அனுப்பிய புகைப்படம் கீழே பதியப்பட்டுள்ளது. தமிழக மாணவர்களுக்கு உதவுவதற்கு அரசு அலுவலர்களை அனுப்பவில்லை என்றாலும் கூட நியூஸ் 7 தொலைக்காட்சி முன்னெடுத்துள்ள இந்த பணி அற்புதமானதே…இதே போல் எல்லோரும் பொது பணியில் இறங்கலாமே..