Sunday 31 May 2015

படிக்காத மேதை காமராஜரின் தொலைநோக்கு பார்வை

தற்போது தமிழகம் முழுவதும் உள்ள பெரும் பிரச்சனை இந்த ஆண்டு போதிய பருவமழை இருந்தும் அணைகளில் நீர் இல்லை. அணை மட்டும் அல்ல, ஏரி குளங்களிலும் நீர் இல்லை. காரணம் இவை ஒன்றுமே தூர்வாரப்படவில்லை. சட்ட அறியாமையும், துறைகளுக்கு இடையே உள்ள ஒத்துழையாமையும், பொறுப்பு எடுப்பதற்கு உள்ள தயக்கமும் மீடியாக்களின் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் உள்நோக்கத்தோடு கூடிய தாக்குதல்களும் இதற்கு காரணமாக அமைகின்றன.

விவசாயத்திற்கு நீரே பிரதானம். தண்ணீரை ஏரி, குளம் அனைத்திலும் எவ்வளவு சேமிக்க முடியுமோ அவ்வளவு சேமித்தால் மட்டுமே விவசாயத்தை நாம் காப்பாற்ற முடியும். வறட்சி காலத்தில் மக்களுக்கு மற்றும் கால்நடைகளுக்கான குடிநீர் தேவையையும் தீர்க்க முடியும். இவை அனைத்தையும் அரசே செய்ய வேண்டும் என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லாதது மட்டும் அல்ல. இதனை செயல்படுத்தவும் முடியாது. இதனை கருத்தில் கொண்டு காமராஜர் முதல்வராக இருக்கும் போது ஒரு அரசாணை பிறப்பித்தார். அதன்படி ஏரி, குளங்களில் நீர் வற்றிய உடன் ஏரி, குளம் கரையில் இருந்து 20 அடி தள்ளி ஏரி, குளங்களின் உள்ளே படிந்துள்ள வண்டல் மண், சவடு மண் முதலிய அனைத்தையும் விவசாயிகள் மற்றும் மண்பாண்ட உற்பத்தியாளர்கள், கைசெங்கல் உற்பத்தி செய்பவர்கள் இலவசமாக எடுத்து கொள்ளலாம். அதற்கு தனியாக அனுமதி பெற வேண்டியது இல்லை என உத்தரவு பிறப்பித்தார். இதனால் அரசு செலவில்லாமல் ஏரி குளங்கள் தூர்வாரப்பட்டு மழைக்காலத்தில் அதிக நீரை சேமித்து வைக்க தயார் நிலையில் இருக்கும். காமராஜரின் மேற்கண்ட அரசாணை 1985-க்கு பிறகு மாற்றப்பட்டு விட்டது. முதலில் செங்கல் உற்பத்தியாளர்கள் பணம் செலுத்தி இவற்றை அள்ள வேண்டும் என கையை வைத்தார்கள். பிறகு விவசாயிகள் மண் பாண்ட தொழிலாளர்கள் 50 லோடு மட்டும் இலவசமாக அள்ளலாம் என மாற்றினார்கள். தற்போது விவசாயிகளும் மண்பாண்ட தொழிலாளர்களும் மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற்றே இந்த மண் அள்ள வேண்டும் என ஆணை பிறப்பித்து விட்டார்கள். இதனால் அரசுக்கும் விவசாயிகளுக்கும் பெரும் இழப்பு. விவசாயிக்கு போதிய நீர் இல்லாமல் போகிறது. இடையில் விவசாயம் செய்ய முடியாமல் பயிர் கருகுகிறது. அரசுக்கு தூர்வார்வதற்கு ஏராளமாக செலவாகிறது.

ஒரு வட்டத்தில் சுமார் 200 குளங்கள் இருக்கும். இந்த 200 குளங்களையும் நீர் வற்றிய பிறகு தூர்வார வேண்டுமா என அதிகாரிகள் பார்வையிட்டு செலவு மதிப்பீடு உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி அரசு அனுமதி பெறுவதற்கு முன் 3 வருடம் ஆகி விடும்;. எனவே 3 வருட விவசாயம் பாதிக்கப்படுகிறது.
தற்போது இவை அனைத்துமே சவடு மணல் என்ற பெயரில் சில தனி நபருக்கு எழுதப்படாத குத்தகையாக கொடுக்கப் பட்டுள்ளது. அவர் மாவட்ட வாரியாக சில நபர்கள் பெயரை கொடுத்துள்ளார். அவரிடம் பணம் கட்டி தான் அவர் பெயரில் தான் தற்போது விவசாயியும் குளத்தில் மண் அள்ள முடியும். இதனால் அரசுக்கு வருமானம் தமிழகம் முழுவதும் சேர்ந்து ஆண்டுக்கு 25 லட்சத்திற்கும் குறைவு. சம்பந்தப்பட்ட நபர்களுக்கு பல கோடிக்கு மேல். இவர்கள் சவுடு மண் என்ற பெயரில் அனுமதியற்ற இடங்களிலும், ஆற்று படுகைகளிலும் மணலை தான் அள்ளி விற்பனை செய்கிறார்கள். எனவே அனைத்து குளங்களையும் முழுவதையும் அரசே தூர்வார வேண்டும் என்றால் ஆண்டுக்கு 300 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். 

மாறாக காமராஜரின் அப்போதைய அரசாணையை இப்போதும் செயல்படுத்தினால் அரசுக்கு ஒரு பைசா செலவில்லாமல் குளங்கள் முழுவதும் தூர்வாரப்படும். விவசாயியும் மண்பாண்ட தொழிலாளர்களும் அல்லாமல் வேறு நபர்கள் இவற்றை அள்ளி செல்ல வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட ஊராட்சியிடம் பணம் செலுத்தி அள்ளி செல்ல வேண்டும் என அனுமதி கொடுத்தால் சம்பந்தப்பட்ட ஊராட்சிக்கும் வருமானம் கிடைக்கும். இயற்கையாகவே ஏரி குளங்கள் தூர்வாரப்பட்டு ஏராளமான மழை நீர் சேமித்து வைக்கப்படும். இதனால் விவசாயிகள் தண்ணீர் இல்லை என குறை சொல்லும் நிலை வராது. விவசாய உற்பத்தி கூடும்.

இவை அனைத்தையும் தொலைநோக்கோடு எண்ணி மேற்கண்ட அரசாணையை பிறப்பித்த காமராஜரை படிக்காத மேதை என மக்கள் சொல்வது இதற்கு தானோ!!.

No comments:

Post a Comment