Monday 9 December 2019

குலசேகர பட்டிணம் ராக்கெட் ஏவுதளம். நாம் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

குலசேகரபட்டிணம் ராக்கெட் ஏவுதளம் பற்றிய சர்ச்சை.  10000 பேருக்கு வேலை என்பது நிச்சயமாக இல்லை. அணுசக்தி துறை, விண்வெளி துறை முழுவதுமே மலையாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. மகேந்திரகிரி ராக்கெட் எரிபொருள் நிலையத்திலும் வேலை பார்ப்பவர்களில் 80 சதவீதம் பேர் கேரளா மாநிலம். மற்றவர்கள் இதர மாநிலம். எடுபிடி வேலைக்கு மட்டுமே தமிழர்கள். ராக்கெட் ஏவுதளம் அமைக்கப் பட்ட உடன் அப்பகுதி பாதுகாக்கப் பட்ட பகுதியாக அறிவிக்கை செய்யப்படும். அங்கு மற்றவர்கள் நுழைய முடியாது. இதர கட்டுப்பாடுகள் வந்து விடும். தொழில்பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு வளையத்திற்குள் வரும். குலசேகர பட்டிணம் தசராவிற்கு தடை இருக்காது. ஆனால் தற்போது போல் வாகனங்களை அருகில் நிறுத்த முடியாது. திருச்செந்தூரில் கொண்டு போய் நிறுத்த சொல்வார்கள். 

2300 ஏக்கர் நில ஆர்ஜிதம் என்பதும் நில ஆர்ஜித சட்டப்படி செயல்படுத்தப்படும். நில ஆர்ஜித சட்டப்படி கைடுலைன் வேல்யூவிற்கு இரண்டு மடங்கிற்கு மேல் பணம் கொடுக்க சட்டத்தில் வழிவகை இல்லை. எனவே நில மதிப்பு குறைவாகவே நிர்ணயிக்கப்படும். மரங்களில் தென்னை மரத்திற்கு அரசு நிர்ணய மதிப்பு ரூபாய் 1600. இந்த மதிப்பில் தென்னை மரம் உருவாக்க முடியுமா? இதை விட இன்னொரு கொடுமை நிலமதிப்பு குறைவு எனக்கு கூட்டி வேண்டும் என கேட்டால் அரசு ஆர்ஜிதம் செய்யும் நிலத்திற்கான தொகையை சப்கோர்ட்டில் டெபாசிட் செய்து விடும். வழக்கை முடித்து தான் நாம் தொகையை திரும்ப பெற வேண்டும். 

வழக்கு எவ்வளவு சீக்கிரம் முடியும் என்பதற்கு ஒரு சின்ன உதாரணம் மணவாளக்குறிச்சி இந்திய அருமணல் ஆலைக்கு 1973-ல் நில ஆர்ஜிதம் செய்தார்கள். ஒரு செண்டு 7 ரூபாய் என நிர்ணயித்தது தவறு. செண்டு 30 ரூபாய் என நிர்ணயிக்க வேண்டும். தென்னை மர கிரையம் ரூபாய் 15 என நிர்ணயித்தது தவறு அதனை ரூபாய் 50 ஆக நிர்ணயிக்க வேண்டும் என அங்குள்ள தென்னந்தோப்பு உரிமையாளர்கள் நாடார்கள் வழக்கு தொடர்ந்தார்கள். சார்பு நீதிமன்றத்தில் 17 ஆண்டுகள் வழக்கு நடந்து ஒரு செண்டு 13 ரூபாய் என நிர்ணயித்தார்கள். நிர்ணயித்த தொகை குறைவு என நில உரிமையாளரும், தொகை அதிகம் என இந்திய அருமணல் ஆலையும் அப்பீல் போட்டு இறுதியாக உயர்நீதிமன்றத்தில் 2011-ல் ஒரு செண்டு ரூபாய் 23 என வைத்து கொடுக்க வேண்டும் என உத்தரவானது. ஆனால் தென்னந்தோப்பு முதலாளி 1992-லேயே பஸ் ஸ்டாண்டில் பாரம் ஏற்றி இறக்கும் வேலைக்கு வந்து விட்டார். 

நிலம் எடுக்கும் போது நிலம் இழப்பவர்களுக்கு வேலை கொடுப்போம் என கூறிய அரசு மத்திய அரசு பணிகளுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணயம் மூலம் மட்டுமே பணியாளர் நியமிக்கப் படுவார்கள். எனவே வேலை கொடுக்க முடியாது என கூறி விட்டது. இதே நிலை குலசேகர பட்டிணத்திலும் வரலாம். இதனை தவிர்க்க வழி இல்லையா என்றால் இருக்கிறது. திட்டம் வரட்டும். 

அரசு நிர்ணயிக்கும் சந்தை மதிப்பிற்கு நாங்கள் நிலம் தர தயார். ஆனால் நிலம் கொடுக்கும் குடும்பத்தில் ஒரு நபருக்கு கட்டாயமாக ரூபாய் 15000 சம்பளத்திற்கு குறையாமல் வேலை கொடுக்க வேண்டும்.  அவர் பணி ஓய்வு பெற்றால் அவர் வாரிசில் ஒருவருக்கு இதே வேலை கொடுக்க வேண்டும். கல்வி தகுதி உள்ள நபர்கள் இருந்தால் அவர்களுக்கு தகுதி உள்ள பணி வழங்க வேண்டும் என ஒரு ஒப்பந்தத்தை அணுசக்தி துறையும், மாநில அரசும், மாவட்ட ஆட்சியரும், நிலம் கொடுக்கும் நபர்களின் பிரதிநிதி அல்லது நிலம் கொடுக்கும் நபர்களும் நிறைவேற்றி அந்த ஒப்பந்தத்தை அரசிதழில் அறிவிக்கை செய்து அதன் அடிப்படையில் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டால் நிலம் கொடுக்கும் நபர்களுக்கு பணி பாதுகாப்பு உறுதி. அதே நேரத்தில் 20 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இலவச குடிநீர், மருத்துவம், உயர்தர கல்வி போன்ற அத்தியாவசிய பணிகளை செயல்படுத்துவோம் என்ற உறுதிமொழியையும் , தசரா காலங்களில் வாகன நிறுத்த தடையில்லை என்றும், கோவிலுக்கு திருவிழாவிற்கு வருபவர்கள் தங்கி இருக்க தடையில்லை என்று ஒரு ஷரத்தையும் சேர்த்தால் இப்பகுதியில் பாதிப்பு பெரிதாக இருக்காது. வளர்ச்சிக்கு வாய்ப்பு இருக்கும். இன்னொன்றும் செய்ய வேண்டும். 

பணிகளையும் ஒப்பந்த வேலைகளையும் பொறுத்த வரையில் வடநாட்டு நிறுவனங்களை விட தமிழ்நாட்டு நிறுவனங்கள் அரை சதவீதம் கூடுதல் போட்டு இருந்தாலும் தூத்துக்குடி மாவட்ட நிறுவனங்கள் 1 சதவீதம் கூடுதல் போட்டு இருந்தாலும் அவர்களுக்கே கொடுக்க வேண்டும் என்ற ஷரத்தையும் ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே வடநாட்டு நிறுவனங்கள் மற்றும் வடநாட்டினர் இங்கு கால் ஊன்றுவதை தடுக்க முடியும்.

No comments:

Post a Comment