Tuesday 3 December 2019

13-லிருந்து 37: தமிழக மாவட்டங்கள் பிறந்த கதை

மெட்ராஸ் ராஜதானியில் இருந்து ஆந்திராவும் கர்நாடகாவும் பிரிந்தபோது, தமிழகத்தின் மாவட்டங்கள் பெரியதாக இருந்தன. இதனால் நிர்வாகம் செய்ய முடியாத ஒரு நிலை இருந்து வந்தது. அப்போதுதான் இதற்கு தீர்வாக மாவட்டங்களை இரண்டாகவும் மூன்றாகவும் பிரிப்பது என்று முடிவானது.

முதன்முதலில் பிரிக்கப்பட்ட மாவட்டம் தர்மபுரி. இது ஆங்கிலேயர் ஆட்சியின்போது, சேலம் மாவட்டத்தின் கீழ் இருந்து வந்தது.

1966ஆம் ஆண்டு முதலமைச்சர் பக்தவாசலம் தலைமையிலான அரசு தர்மபுரியைத் தனி மாவட்டமாகப் பிரித்தது. இந்த தர்மபுரியின் எல்லை, தற்போதைய தர்மபுரியைவிட பெரியதாக இருந்தது. இந்த மாவட்டம் மேலும் இரண்டாகப் பிரிந்து, கிருஷ்ணகிரி புதிய மாவட்டமாக உருவெடுத்தது.

இதன்பின்னர் 1974ஆம் ஆண்டு தற்போதைய அறந்தாங்கி, இலுப்பூர், புதுக்கோட்டைப் பகுதிகளை அன்றைய தஞ்சாவூரிடம் இருந்தும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருந்தும் தனியாகப் பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் அறிவிக்கப்பட்டது.

சேலம் மாவட்டத்துக்கு அடுத்தபடியாக அளவில் பெரியதாக இருந்து கோவை மாவட்டம் 1979 ஆம் ஆண்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டு, ஈரோடு என்று புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் புவியியல் எல்லை பெரிதாக இருந்த காரணத்தால், அது மூன்றாக உடைக்கப்பட்டு விருதுநகர் மற்றும் சிவகங்கை எனப் புதிதாக இரண்டு மாவட்டங்கள் பிறந்தன.

1980களில் மட்டும் புதிதாக எட்டு மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. மதுரையிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் உருவானது. திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்கள் வட ஆற்காடு மாவட்டத்திலிருந்தும்; தூத்துக்குடி மாவட்டம் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்தும் இந்த காலகட்டங்களில் உருவாக்கப்பட்டன.

தமிழகத்தைப் பொறுத்தவரையில், 1990களில்தான் அதிக முறை மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. தஞ்சாவூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு நாகப்பட்டினம் திருவாரூர் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன. தென் ஆற்காடு மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களாக உருவானது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருந்து கரூர் மற்றும் பெரம்பூர் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதுமட்டுமின்றி தேனி, நாமக்கல், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களும் இந்த காலகட்டத்தில் உருவாக்கப்பட்டன.


1960ஆம் ஆண்டு தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென்னாற்காடு, சேலம் மாவட்டம், கோவை, நீலகிரி, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, இராமநாதபுரம் திருநெல்வேலி, கன்னியாகுமரி என 13 மாவட்டங்கள் மட்டுமே இருந்தன.

எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில்தான் மாவட்டங்களுக்குத் தலைவர்கள் பெயர் சூட்டப்பட்டது. முதன்முதலாக ஈரோடு மாவட்டத்துக்கு பெரியார் மாவட்டம் என்றும், தூத்துக்குடி மாவட்டம் வ.உ.சிதம்பரனார் மாவட்டம் என்றும் அறிவித்தார். அப்போதைய நெல்லை மாவட்டத்தை கட்டபொம்மன் மாவட்டம் என்றும் பெயர் சூட்டினார்.

இதற்கு நெல்லை என்ற பெயரை நீக்கக்கூடாது என்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நெல்லை கட்டபொம்மன் மாவட்டம் என்று மாற்றி அழைக்கப்பட்டது.

மேலும் விருதுநகர் மாவட்டத்துக்கு காமராஜர் மாவட்டம் என்றும், சிவகங்கை மாவட்டத்துக்குப் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மாவட்டம் என்றும் அறிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டத்துக்கு அண்ணா மாவட்டம் என்று எம்.ஜி.ஆர் பெயர் சூட்ட முற்பட்டார், இது அப்போது மிகுந்த விவாதப் பொருளானது. அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான கருணாநிதி, அண்ணா பிறந்த செங்கல்பட்டு மாவட்டத்துக்குத்தான் அண்ணா மாவட்டம் என்ற பெயரைச் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இது ஏற்கப்படாததால் 1989-இல் கருணாநிதி முதல்வரானதும் திண்டுக்கல் மாவட்டத்தின் பெயரில் இருந்து அண்ணாவை நீக்கி, செங்கல்பட்டு மாவட்டத்துக்கு செங்கை அண்ணா மாவட்டம் எனப் பெயர் சூட்டினார்.

நாகப்பட்டினம் காயிதே மில்லத் மாவட்டமாகவும், திருவண்ணாமலை சம்புவராயர் பெயராலும் அழைக்கப்பட்டது. இப்படிப் பல தலைவர்களின் பெயர்களில் தமிழக மாவட்டங்கள் இருந்தன.

1996 காலகட்டத்தில் நடைபெற்ற ஜாதிக் கலவரங்களால் அணைத்துக் கட்சிக் கூட்டத்தின் முடிவின்படி தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.

கடந்த ஜூலை மாதம் செங்கல்பட்டு, தென்காசி மாவட்டங்கள் காஞ்சிபுரம் திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்து பிரிக்கப்பட்டன. ஏற்கெனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியாகப் பிரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் 32 மாவட்டங்களாக இருந்துவந்த எண்ணிக்கை தற்போது 37 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் பிரிப்பது தமிழகத்தில் மட்டும் நடக்கும் ஒரு நிகழ்வு அன்று. இந்தியா முழுவதுமே தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது.

39 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும்

ஆனால் கடந்த எட்டு மாதங்களில் மட்டும் தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளையும் 39 மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திருவள்ளூர் வேலூர் ராணிப்பேட்டை என மூன்று மாவட்டங்களின் பகுதிகளும் வருகின்றன. இதனால் அரக்கோணம் தொகுதி மேம்பாட்டுக்கான நிதியை ஒதுக்குவதில் சிக்கல் எழுகிறது.

ஒரே மக்களவை உறுப்பினர் எப்படி மூன்று மாவட்டங்களின் வளர்ச்சிக் குழுவில் உறுப்பினராக இருக்க முடியும் என்ற கேள்வியும் எழுகிறது. கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் மாநிலங்களில், நாடாளுமன்றத் தொகுதிகளே மாவட்டங்களாகவும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு மாவட்டம் உருவாக்கப்படுகிறது என்றால் அதற்கான உள்கட்டமைப்புக்கு சுமார் ரூ.70 கோடி செலவாகும். மேலும் மாவட்டங்கள் புதிதாக அறிவித்த போதிலும் நிர்வாக ரீதியாகப் பெரிய மாற்றங்கள் நிகழவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியும் வருகின்றன.

இந்நிலையில் நாகை மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறையும், தஞ்சாவூரிலிருந்து கும்பகோணத்தையும், கோவையிலிருந்து பொள்ளாச்சியையும் தனி மாவட்டங்களாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment